×

சென்னையில் இருந்து மும்பை விமானத்தில் ₹1.57 கோடி வெளிநாட்டு பணம் கடத்த முயற்சி: மும்பை பயணி கைது

மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து நேற்றிரவு மும்பை செல்லும் தனியார் ஏர்லைன்ஸ் விமானத்தில் ₹1.57 கோடி வெளிநாட்டு ஹவாலா பணத்தை கடத்த முயற்சி நடைபெற்றது. அப்பணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, மும்பை பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து கடந்த 2 நாட்களாக ஒன்றிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர். பின்னர் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்து, அதன் நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வந்ததும், சென்னை உள்பட அனைத்து மாநில விமான நிலையங்களிலும் பயணிகளிடம் தீவிர சோதனைகள் நடைபெறும். அப்போது அளவுக்கு அதிகமாக எடுத்து செல்லப்படும் பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று ஒன்றிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் நேற்றிரவு மும்பை செல்லும் ஒரு தனியார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தயார்நிலையில் நின்றிருந்தது. அதில் செல்லவேண்டிய பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் கருவி மூலம் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனர். அதேபோல், இந்த விமானத்தில் மும்பை செல்வதற்காக வந்திருந்த மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த விக்கி ஜெகதீஷ் பாட்டியா (48) என்ற பயணி வைத்திருந்த கைப்பைமீது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரது கைப்பையை வாங்கி பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் கருவி மூலம் பரிசோதித்தனர். இதில், அந்த கைப்பையின் அடிப்பகுதியில் உள்ள ரகசிய அறைக்குள் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அந்த கைப்பையின் அடிப்பாகத்தில் லைனிங் துணிகளால் அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறைக்குள் 13 பார்சல்கள் இருப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்தனர். அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அதற்குள் அமெரிக்க டாலர் மற்றும் சவூதி அரேபியாவின் ரியால் என வெளிநாட்டு பணம் அதிகளவில் இருப்பது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மும்பை செல்லும் விக்கி ஜெகதீஷ் பாட்டியாவின் பயணத்தை ரத்து செய்தனர்.

பின்னர் அப்பணக்கட்டுகளை இயந்திரங்கள் மூலம் எண்ணி பார்த்தபோது, இந்திய மதிப்பில் ₹1.57 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மும்பை பயணியை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹1.57 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மும்பை பயணி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தையும் விமானநிலைய வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மும்பைக்கு விமானத்தில் வெளிநாட்டு பணத்தை கடத்த முயற்சித்த விக்கி ஜெகதீஷ் பாட்டியாவை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவை அனைத்தும் வெளிநாட்டு ஹவாலா பணம் எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இப்பணத்தை மும்பையில் யாரிடம் கொடுப்பதற்கு விக்கி ஜெகதீஷ் பாட்டியா எடுத்து சென்றார், சென்னையில் அவருக்கு ஹவாலா பணத்தை கொடுத்த மர்ம நபர் யார், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்குமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் மும்பை பயணியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post சென்னையில் இருந்து மும்பை விமானத்தில் ₹1.57 கோடி வெளிநாட்டு பணம் கடத்த முயற்சி: மும்பை பயணி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mumbai ,
× RELATED சென்னையில் அனுமதியின்றி...